சிறைக் காவலரின் மனமாற்றம்! இஸ்லாத்தில் சரணடைந்தார்!!டெர்ரி ஹோல்டுப்ரூக்ஸ்! குவாண்டனமோ சிறைச்சாலையின் பாதுகாவலராகப் பணியாற்றியவர். அதற்குமுன் சில காலம் அமெரிக்க இராணுவத்தில் சிறப்பு வீரராகப் பணிபுரிந்தவர். குவாண்டனமோ சிறைக்கைதி எண் 590 அஹ்மதிடம் உரையாடும் நிமிடம்வரை இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை அறியாதவர். அல்லது இஸ்லாத்தைப் பற்றி தவறான விளக்கம் கொடுக்கப்பட்டவர். 2004இல் குவாண்டனமோ சிறைச்சாலை பணிக்கு நியமிக்கப்பட்ட இவர், சிறைக் கைதிகளை அவரவர் அறைகளில் இருந்து வெளியேற்றி, விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்தார். தவிர, சிறைச்சாலையின் அறைகளுக்குள் கைதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதையும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதையும் தடுக்கும் கூடுதல் பொறுப்பிலும் இருந்தார். இத்தகைய பணியின் காரணமாக டெர்ரிக்கு, பெரும்பாலும் கைதிகளின் அசைவுகளை நுணுக்கமாக கவனிக்கும் சூழல் ஏற்பட்டிருந்தது. பொழுது போக்கிற்காக சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ள கைதிகளிடம் வெளியில் நாற்காலியில் அமர்ந்திருந்தபடியே மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பது அவரது வழக்கம். இத்தகைய சூழலில்தான் மொராக்கோவைச் சேர்ந்த அஹ்மது இராக்கிதி என்ற (எண் 590) கைதியுடன் உரையாடும் வாய்ப்பும் அவருக்கு அதிகமாகக் கிடைத்தது. பல்வேறு பொதுவிஷயங்களைப் பற்றி பேசினாலும், இஸ்லாம் பற்றிய விபரங்களை சிறைக்கைதி அஹ்மத் கூறக் கூற வியப்பிலாழ்ந்து போனார் டெர்ரி. ஏனெனில் அன்றுவரை தாம் கேள்விப் பட்டிருந்த இஸ்லாமும், அஹ்மத் கூறிய இஸ்லாமும் முற்றிலும் மாறுபட்டிருந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இது பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள உடனடியாக இஸ்லாம் தொடர்பான அனைத்து அரபிப் புத்தகங்களையும் மொழி பெயர்ப்புகளையும் வரவழைத்துப் படிக்கத் துவங்கினார். இடையிடையே தமக்குத் தோன்றும் கருத்துக்களையும் சந்தேகங்களையும் அஹ்மதிடம் அடுத்தடுத்த இரவுகளில் பகிர்ந்து கொள்வார். அதில் எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தொடர்புடைய புத்தகங்களையும் தேடிப் படிக்கலானார். பெரும்பாலும் நள்ளிரவில் நடக்கும் இத்தகைய உரையாடல்கள் தமது சிந்தனைகளை தூண்டிவிட்டதாகவும் தனது சொந்த வாழ்க்கையைப் பற்றிய தெளிவினைத் தந்ததாகவும் இப்போது கூறுகிறார். ஒரு நாள் மாலைப் பொழுதில் சிறைக்கைதி அஹ்மத் உடன் ஏற்பட்ட மற்றொரு கலந்துரையாடலில் மனமுவந்து கூறும் ஷஹாதா என்ற ஒரு வரி வாக்குறுதி / பற்றுறுதியே ஒரு மனிதன் இஸ்லாத்தைத் தழுவிக்கொள்ளப் போதுமானதாகும் என்பதை அறிந்து கடும் வியப்பிலாழ்ந்தார். ["வணங்குதற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறில்லை; நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்" என்பதே ஷஹாதாவாகும்]. உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாத டெர்ரி, ஆர்வம் மேலிட ஒரு பேப்பரையும் பேனாவையும் சிறைக் கம்பிகளின் கீழே தள்ளினார். சிறைக்கைதி அஹ்மதிடம் கூறி ஆங்கிலத்திலும் அரபி உச்சரிப்பிலும் அதனை எழுதிக் கொடுக்குமாறு கேட்டார். எழுதி வாங்கிய பேப்பரோடு குவாண்டனமோ சிறைச்சாலைத் தரையில் அமர்ந்து சப்தமிட்டு ஷஹாதாவை முன்மொழிந்தார் டெர்ரி. ஆம்; டெர்ரி இஸ்லாத்தைத் தழுவியது குவாண்டனமோ சிறைக் கொட்டடியில்! குவாண்டனமோ பயங்கரங்கள்! குவாண்டனமோ சிறைச்சாலையில் கைதிகள், தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள் அடித்துத் துவைக்கப்படும், கொடூரமான முறையில் துன்புறுத்தப் படும் செயல்கள் வரலாற்றாசிரியர்களால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே! 2005இல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஹோல்டு ப்ரூக்ஸ் இக்கொடூரங்கள் பற்றிய தனது எண்ணங்களையும் அமெரிக்க ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார். கடந்த சில வாரங்களாக நியூஸ்வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க இராணுவ வீரர்கள், விசாரணை அலுவலர்கள் கைதிகளிடம் மனிதத் தன்மையே இல்லாமல் நடந்து கொள்வது பற்றி விவரித்துள்ளார். அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான 9/11 தாக்குதலுக்குப் பழி வாங்குவதாக எண்ணிக் கொண்டு அமெரிக்கச் சிறைக் காவலர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகக் கூறியுள்ளார். இத்துடன் நியூயார்க்கின் 9/11 சம்பவத்தில் புஷ்ஷின் அரசாங்கம் பெரும் சதியை அரங்கேற்றியுள்ளது என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் ஏன் கைது செய்யப்பட வேண்டும். ஏன் இவர்கள் கீழ்த்தரமாகவும் கொடூரமாகவும் சித்ரவதை செய்யப்பட வேண்டும்? பின்பு ஏன் சில வருடங்களுக்குப் பின் குற்றமற்றவர் என்று வெளியேற்றப்பட வேண்டும்? இத்தகைய கேள்விகள் குவாண்டனமோ சிறைச்சாலை அலுவலர்களிடையே ஆங்காங்கே உருப்பெற்று ஒரு சிலர் முதன் முறையாக அரசுக்கெதிராகக் குரல் எழுப்பியுள்ளனர். "பெரும் பயங்கரவாதிகளை எதிர்நோக்கியிருந்த தனது ஆவலும் எதிர்பார்ப்பும், குவாண்டமோவினுள் கொண்டு வரப்படும் அப்பாவிகளைக் கண்டு பொய்த்து விட்டது" என்று கூறுகிறார் நீலி.
இஸ்லாம் பரிந்துரைக்கும் அழகிய தோற்றத்தில் தற்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட டெர்ரி, தனது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் பெரும் குடிகாரனாகவும், மிகவும் சீர்கெட்ட நடத்தைகள் கொண்டு கழித்ததையும் எண்ணி வெட்கப்படுவதாகக் கூறுகிறார். கடந்த 2002இல் இராணுவத்தில் சேர்வதற்கு முன்பிருந்த சீர்கெட்ட வாழ்க்கையை இராணுவ ஒழுங்குமுறைகள் சீர்படுத்தவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். எந்த ஒரு வரையறையும் இன்றி, நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த தனது அவல வாழ்க்கையினை எண்ணிப் பார்க்கும் இவர், இராணுவம் தராத ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் தன்னுள் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார். ஹிப்பிகளின் கலாச்சாரமான உடல் முழுக்க பச்சை குத்திக் கொண்ட உருவ அலங்காரங்களுடனும் பெரும் ஓட்டைகளை தனது காதில் இட்டு அதில் மரத்திலான தட்டுக்களை அலங்காரப் படுத்திக் கொண்டு திரிந்ததையும் நினைவுகூரும் இவர் "என் உடலில் இன்னும் எஞ்சியுள்ள இத்தகைய அசிங்கங்கள் என் கடந்த கால அவலத்தைப் பிறருக்கு எடுத்துக் கூற ஒரு சான்றாக இருக்கும்!" என்கிறார் உறுதியுடன். தமிழாக்கம்: அபூ ஸாலிஹா
|
Thursday, January 6, 2011
சிறைக் காவலரின் மனமாற்றம்! இஸ்லாத்தில் சரணடைந்தார்!!
----------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment